Home » Latest Stories » தனிப்பட்ட நிதி » உங்கள் எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க உதவும் ஆபத்பாந்தவன்

உங்கள் எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க உதவும் ஆபத்பாந்தவன்

by Gunasekar K

தனிநபர் கடன் என்பது எந்தவிதமான பிணையமும் இல்லாமல் வழங்கப்படும் ஒரு கடன். தனிநபர் கடன்கள் என்பது பொதுவாக வங்கிகள், கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வழியாக கடன் வழங்கும் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. 

மேலும் வணிகத் தேவை, சுற்றுலா அல்லது திருமணம் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம்.

தனிநபர் கடனின் வட்டி விகிதங்கள் கடன் வழங்குபவர் மற்றும் கடன் பெறுபவரின் கடன் வரலாறு மற்றும் வருமானத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, நல்ல கிரெடிட் ஸ்கோர் உடன் நிலையான மாத வருமானம் உள்ள கடன் பெறுபவர்கள் குறைந்த வட்டி விகிதங்களில் கடன் பெற தகுதி பெறுவார்கள். அதே சமயம் குறைந்த கிரெடிட் ஸ்கோர் அல்லது நிலையற்ற வருமானம் உள்ளவர்கள் அதிக வட்டி விகிதங்களில் கடன் பெற தகுதி பெறுவார்கள்.

தனிநபர் கடன்கள் வழக்கமாக நிலையான தொகையில் வழங்கப்படுகின்றன. மேலும், கடனை அடைக்கும் வரை கடன் பெற்றவர் மாதத் தவணைகளைச் செலுத்த வேண்டும். கடன் திருப்பி செலுத்தும் காலம் மற்றும் மாதத் தவணைகளின் தொகை போன்றவை பெறும் கடனின் அளவு மற்றும் வட்டி விகிதத்தைப் பொறுத்தது.

தனிநபர் கடன்களின் மிக சிறந்த நன்மை என்னவென்றால், பணத்தைக் கடனாகப் பெறுவதற்கு விரைவான மற்றும் மிகச் சிறந்த வழி . குறிப்பாக ஆன்லைனில் கடன் வழங்குபவர்கள் கடன் விண்ணப்பங்களை விரைவாகச் செயலாக்க முடியும். சில நேரங்களில், ஒரு சில நாட்களுக்குள் கடன் பெறுபவரின் வங்கிக் கணக்கில் பெற்ற கடன் தொகை டெபாசிட் செய்யப்படலாம்.  இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், தனிநபர் கடனின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மிகவும் கவனமாகப் பரிசீலித்து, பெற்ற கடனை மாத மாதம் எந்த விதமான தடைகளும் இல்லாமல் உங்களால் திருப்பி செலுத்த முடியுமா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம்.

தனிநபர் கடனின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள்

நன்மைகள்:

  1. தனிநபர் கடன்கள் பொதுவாக பிணையம் தேவைப்படாது கடன்கள். அதாவது கடனைப் பெற கார் அல்லது வீடு போன்ற சொத்துக்களை பிணையம் வைக்க வேண்டிய தேவையில்லை.
  2. கிரெடிட் கார்டு கடனை செலுத்துதல், வீட்டை புதியதாக  மேம்படுத்துதல் அல்லது சுற்றுலா விடுமுறைக்கு செல்வது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக தனிநபர் கடன்களைப் பெறலாம்.
  3. பெரும்பாலும் தனிநபர் கடன்கள் நிலையான வட்டி விகிதங்களில்  வழங்கப்படுகின்றன. எனவே, உங்களது மாதத் தவணைகள் கடனைத் திருப்பி செலுத்தும் காலம் வரை அதாவது 60 மாதங்கள் வரை ஒரே மாதிரியாக இருக்கும். மாதத் தவணைகள் அதிகரிக்காது மற்றும் குறையாது.
  4. உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து, கிரெடிட் கார்டில் நீங்கள் பெறும் வட்டி விகிதத்தை விட நீங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடனைப் பெறலாம்.

குறைபாடுகள்:

  1. பொதுவாக குறைந்த வட்டி வீதங்களில் வழங்கப்படும் அடமானக் கடன் அல்லது கார் கடன்கள் போன்ற கடன்களை விட தனிநபர் கடன்கள் அதிக வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன.
  2. உங்களது கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், தனிநபர் கடனுக்குத் தகுதி பெற முடியாமல் போகலாம் அல்லது ஒரு வேளை கடன் பெற்றால் அதிக வட்டி விகிதத்தில் கடனைத் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
  3. நீங்கள் தனிநபர் கடனை பெறும்போது, அதற்கான செயலாக்க கட்டணங்கள் அல்லது பிற கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கலாம்.
  4. தனிநபர் கடனில் குறிப்பிட்ட தவணை தேதியில் பணம் செலுத்தத் தவறினால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இது பிற்காலத்தில் நீங்கள் பெற விரும்பும் பல வகையான கடன்கள் (வீட்டு கடன், வாகனக் கடன் மற்றும் அடமானக் கடன்) பெறுவதை பாதிக்கும்.

தனிநபர் கடன் உங்களுக்கு சரியான விருப்பமா என்பதை கவனமாக பரிசீலிப்பதும், சிறந்த விதிமுறைகள் மற்றும் விகிதங்களைக் கண்டறிய பல தேர்வுகளை ஆராய்வது முக்கியம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நன்றாக படிப்பது அல்லது வங்கி ஊழியரிடம் கேட்டு அறிவது மிகவும் அவசியம்.

தனிநபர் கடன் என்றால் என்ன?

  • தனிநபர் கடனுக்கு கடன் பெறுபவர் பிணையத்தை வழங்க வேண்டிய அவசியமில்லை. எனவே, இது பாதுகாப்பற்ற கடன்.
  • தனிநபர் கடனின் நோக்கம் உடனடி நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய நிதி அளிப்பது.
  • இது வணிக முதலீடு, திருமணம், மருத்துவச் செலவுகள் அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் போன்ற காரணங்களுக்காக வழங்கப்படுகிறது. எனினும், வழங்கப்படும் கடன் பயன்படுத்தப்படுவது கடன் பெறுபவரைச் சார்ந்தது. அது கண்டிப்பாக சட்டப்பூர்வமான நிதித் தேவையாக இருக்க வேண்டும்.

தனிநபர் கடனின் வகைகள்

  • பாதுகாப்பற்ற தனிநபர் கடன் – எந்தவிதமான நிலம், வீடு அல்லது வாகனம் போன்ற சொத்துகள் அல்லது பிணையம் இல்லாமல் வழங்கப்படும் கடன்.
  • பாதுகாப்பான தனிநபர் கடன் – வீடு, கார், சேமிப்புக் கணக்கு, காப்பீடு, தங்கம் அல்லது பிற சொத்துகள் போன்றவற்றை பிணையம் வைத்து பெறப்படும் கடன்.
  • தனிப்பட்ட கடன் வரம்பு – தேவைப்படும் போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட தொகை வரையிலான கடன் வழங்கப்படுகிறது.
  • கிரெடிட் கார்டுக்கு எதிரான தனிநபர் கடன் – கிரெடிட் கார்டின் இருப்புக்கு எதிராக வழங்கப்படும் கடன். எ.கா. ராம் என்பவர் 5 லட்ச ரூபாய் இருப்பு உள்ள கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார் என்று கருதுக. தற்போது ராம் 2 லட்சங்கள் உடனடியாக தேவைப்படுகிறது. அந்த கிரடிட் கார்டு இருப்புக்கு எதிராக கடன் பெற்று கொள்ளலாம்.     
  • ஓய்வூதியக் கடன் – அரசு அல்லது தனியார் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் அல்லது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் கடன்.
  • திருமணக் கடன் – பெரும்பாலும் சம்பளம் பெறும் பணியாளர்கள் அவர்களது திருமணச் செலவுகளைச் சமாளிக்க வழங்கப்படும் கடன்.
  • விடுமுறைக் கடன் – உள்நாட்டு சுற்றுலா மற்றும் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் விடுமுறை பயணத்திற்கான நிதியளிக்க வழங்கப்படும் கடன்.
  • வீட்டை புதுப்பிப்பதற்கான கடன் – தற்போதைய நவீன உபகாரணங்களால் வீட்டைப் புதுப்பிக்க வழங்கப்படும் கடன். இது ரியல் எஸ்டேட் சந்தையில் வீட்டின் மதிப்பை அதிகரிக்க உதவுகிறது.
  • நுகர்வோர் பயன்பாட்டு பொருட்கள் கடன் – வீடு மற்றும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி,  ஸ்மார்ட் டிவி, மைக்ரோவேவ் அவென் போன்ற மின் சாதனங்களை வாங்க பெறப்படும் கடன்.

தனிநபர் கடனுக்கான தகுதி

இந்தக் கடன்கள் பாதுகாப்பற்றவை என்பதால்- எந்த வட்டி விகிதத்தில் நீங்கள் கடனைப் பெறுவீர்கள், எவ்வளவு தொகை பெறுவீர்கள், நீங்கள் கடனைப் பெறுவீர்களா இல்லையா என்பது கடன் பெறுபவரின் கிரடிட்  ஸ்கோரைப் பொறுத்தது. உங்களிடம் நல்ல கடன் தகுதி இருந்தால், கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் நீங்கள் கடனைப் பெறுவீர்கள். நீங்கள் நீண்ட காலமாக வங்கியில் வாடிக்கையாளராக அதிக பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு இருந்தால் நிதி ஒழுக்கத்தின் சிறந்த பதிவுடன், நீங்கள் தனிநபர் கடன் பெறலாம். நீங்கள் முன் அங்கீகரிக்கப்பட்ட தனிநபர் கடன் அனுமதியையும் பெறுவீர்கள்.

தனிநபர் கடனுக்குத் தகுதியான நபர்களின் பட்டியல்

பொதுவாக இந்தியாவில் உள்ள அனைத்து வகையான வங்கிகளும் தனிநபர் கடன் பெற தகுதியுடைய பின்வரும் வகையான பணியாளர்கள்/சுய தொழில் செய்பவர்களை பட்டியலிடுகிறது.

  • மத்திய / மாநில அரசு ஊழியர்கள். / தன்னாட்சி அமைப்புகள் / பொது / கூட்டுத் துறை நிறுவனங்கள், பொது லிமிடெட் நிறுவனம் / பன்னாட்டு நிறுவனங்கள் & கல்வி நிறுவனங்கள் – குறைந்தபட்சம் 1 வருடம் தொடர்ச்சியாக பணி செய்திருக்க வேண்டும் 
  • உரிமையாளர், கூட்டாண்மை நிறுவனங்கள், பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள், அறக்கட்டளை ஊழியர்கள் – குறைந்தபட்சம் 1 வருடம் தொடர்ச்சியாக பணி செய்திருக்க வேண்டும்
  • காப்பீட்டு முகவர்கள் – குறைந்த பட்சம் கடந்த – குறைந்தபட்சம் 2 வருடங்கள் தொடர்ச்சியாக பணி செய்திருக்க வேண்டும் 
  • சுயதொழில் வல்லுநர்கள் (டாக்டர், பொறியாளர், கட்டிடக் கலைஞர், உள்துறை வடிவமைப்பாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆலோசகர்கள், பயிற்சி நிறுவனச் செயலாளர்கள் போன்றவர்கள்) – குறைந்தபட்சம் 1 வருட நிலையான வருமானம் பெற்ற வகையில் வணிகம் செய்திருக்க வேண்டும்.
  • சுயதொழில் செய்யும் வணிக நபர்கள் – குறைந்தபட்சம் 1 வருட நிலையான வருமானம் பெற்ற வகையில் வணிகம் செய்திருக்க வேண்டும்.

தனிநபர் கடனுக்கு தேவையான ஆவணங்கள்

  • இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
  • வருமான ஆதாரம்: கடந்த 3 மாதங்களுக்கான வங்கி அறிக்கை மற்றும் சம்பள அறிக்கைகள்  (மாத சம்பளம் பெறுபவராக இருந்தால்)
  • அடையாளச் சான்று: பாஸ்போர்ட்/பான் கார்டு/ஓட்டுநர் உரிமம்/வாக்காளர் ஐடி/ஆதார் அட்டை போன்றவற்றை வழங்கலாம்.
  • வசிப்பிட ஆதாரம்: பாஸ்போர்ட்/ஆதார் அட்டை/மின் கட்டண பில், இணையதளக் கட்டண பில்/வாக்காளர் ஐடி போன்றவற்றை வழங்கலாம்.
  • தற்போதைய வேலையில் தொடர்வதற்கான சான்று – படிவம் 16/நிறுவனத்தின் நியமனக் கடிதம் (சம்பளம் பெறுபவராக  இருந்தால்)
  • கடந்த 2 ஆண்டுகளுக்கான வருமான வரி அறிக்கைகள் (தொழில்முறை/சுய தொழில் செய்பவராக இருந்தால்)

மேற்சொன்ன அனைத்து ஆவணங்களின் நகல்களை வழங்க வேண்டும். 

தனிநபர் கடன் கட்டணம் & கட்டணங்கள்

  • செயலாக்க கட்டணம்: இது உங்களது தனிநபர் கடனை செயலாக்க வசூலுக்கப்படும் 0.5% முதல் 2.50% வரையிலான பராமரிப்பு மற்றும் நிர்வாகக் கட்டணம்.
  • சரிபார்ப்புக் கட்டணங்கள்: கடன் விண்ணப்பதாரரின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைச் சரிபார்க்கவும் வங்கி வழக்கமாக கடன் பெறுபவரின் நற்சான்றிதழ்களைச் சரிபார்க்கவும் மூன்றாம் தரப்பு நிறுவனத்தை நியமிக்கிறது. இந்தச் கூடுதல் செலவு விண்ணப்பதாரரால் மீது விதிக்கப்படுகிறது.
  • தாமதமான EMI மீதான அபராதம்: கடன் பெற்ற நபர் வங்கியிடம் ஒப்புக்கொண்ட தேதியில் குறித்த நேரத்தில் EMI-யை திருப்பிச் செலுத்தத் தவறினால், அவருக்கு அதன் மீது குறிப்பிட்ட சதவீதம்  அபராதம் விதிக்கப்படும்.
  • கடனை முன்கூட்டியே செலுத்துதல் அல்லது முன்கூட்டியே அடைத்தல் மீதான அபராதம்: நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னர் கடனை முன்கூட்டியே செலுத்துதல் அல்லது முன்கூட்டியே அடைத்தல் போன்றவற்றின் போது, ​​வங்கி கடன் பெற்றவருக்கு 2% முதல் 4% வரை அபராதம் விதிக்கலாம். 

   தற்போது பெரும்பாலான வங்கிகள் கடனை முன்கூட்டியே      செலுத்துதல் கட்டணத்தில் விலக்கு அளிக்கின்றன.

  • நகல் அறிக்கைக்கான கட்டணம்: மாத மாதம் நாம் பணம் செலுத்துவதற்கான சான்றாக மற்றும் நிலுவையில் உள்ள கடன்,  நிலுவைத் தொகையின் நகல் அறிக்கையை உங்கள் விருப்பத்தில் பேரில் உருவாக்க ஒரு வங்கி ரூ.200 மற்றும் ரூ.500 கட்டணம் வசூலிக்கலாம். இது நீங்கள் கடன் பெற்ற வங்கியைப் பொறுத்து மாறுபடும். 

தனிநபர் கடனுக்கான உங்கள் CIBIL மதிப்பெண்

உங்கள் தனிநபர் கடனுக்கான CIBIL மதிப்பெண் உங்களுக்கு பின்வரும் தகவல்களை வழங்குகிறது:

  • உங்கள் கடன் நிலையை அறிதல் 
  • இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக கடன் தகுதி பெற்று இருக்கீர்களா என அறிய 
  • குறைந்த வட்டியில் கடன் பெற விரும்பும் நபர்களுக்கு உதவுதல் 
  • அதிக திருப்பி செலுத்தும் காலம் கொண்ட உடனடி தனிநபர் கடன் பெறுதல்  
  • குறைந்தபட்ச ஆவணங்களுடன் நீங்கள் கடன் பெறுவதை உறுதி செய்தல் 
  • விரைவான செயலாக்கம் மற்றும் விரைவான கடன் அனுமதி பெறுவதை உறுதி செய்தல் 
  • வீடுகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற வாடகை அல்லது குத்தகைக்கு விடப்பட்ட சொத்துக்களுக்கு எதிராக விரைவான கடன் ஒப்புதல் பெறுதலை உறுதி செய்தல்.
  • உங்கள் வட்டி விகிதத்தைக் குறைக்க வங்கியுடன் அதிக பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரத்தைப் பெற உதவுகிறது. உங்கள் கடன் செலுத்தும் காலத்தைத் தனிப்பயனாக்கவும் அல்லது பிற தனிநபர் கடனின் நன்மைகள் மற்றும் சலுகைகள் போன்ற பலன்களைப்  கேட்டு பெறவும் உதவுகிறது. 

உங்கள் தனிநபர் கடன் மாதத் தவணையைக் கணக்கிடுங்கள்

பெரும்பாலான வங்கிகள் வழங்கும் தனிநபர் கடனுக்கான EMIயைக்  கணக்கிட பின்வரும் சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது:

EMI = [P x R x (1+R) ^n] / [(1+R) ^ n-1]

இங்கு P என்பது நீங்கள் பெற்ற மொத்த கடன் தொகையின் அளவு 

R என்பது நீங்கள் பெற்ற தொகைக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் மற்றும் 

n என்பது நீங்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைகளின் எண்ணிக்கை.

உதாரணத்திற்கு:

P என்பது ரூ. 3 லட்சம், R என்பது 15 சதவீதம் வருடத்திற்கு = 15/12= 1.250 மாதத்திற்கு, N என்பது 60 மாதங்கள் என்றால், பின்னர் 

மாதத் தவணை தொகை = [300000*1.250/100*(1+1.250/100) ^60]/ [(1+1.250/100) ^60-1] = ரூ. 7,137

தனிநபர் கடனை முன்கூட்டியே செலுத்துதல்

முன்கூட்டியே செலுத்துதல் என்பது குறிப்பிட்ட திருப்பிச் செலுத்தும் காலம் முடிவதற்குள் உங்கள் தனிப்பட்ட கடனைச் செலுத்துவதைக் குறிக்கிறது. இது கடன் பெற்றவர் திருப்பிச் செலுத்தும் காலம் முழுவதும் அவர் பெற்ற மொத்த  தொகை கடனுக்கான வட்டியைச் சேமிக்க உதவுகிறது. இது கடன் பெற்றவர்கள் கடனை வெற்றிகரமாகச் திருப்பி செலுத்தி, அவருடைய/அவளுடைய நிதியை கடன் செலுத்துவதில் இருந்து விடுவிக்க உதவுகிறது.

தனிநபர் கடன் திருப்பி செலுத்தும் காலம் 

தனிநபர் கடன் திருப்பி செலுத்தும் காலம் என்பது கடன் பெற்றவரின் ஆண்டு வருமானம், இதற்கு முன்பு அவர் பெற்ற கடன்களின் வரலாறு (அதாவது குறிப்பிட்ட தேதியில் அனைத்து மாதங்களுக்கும் முறையாக தவறாமல் கடனை திருப்பி செலுத்தியுள்ளார்களா) போன்றவற்றைப் பொறுத்து குறைந்தபட்சம் 12 மாதங்கள் முதல் அதிகபட்சம் 84 மாதங்கள் வரை மாறுபடலாம் (இது நீங்கள் கடன் பெறும் வங்கிகளை பொறுத்தது. இது வங்கிக்கு வங்கி மாறுபடும்).

தனிநபர் கடன் பெறுவதற்கு முன் சில ஆலோசனைகளை நீங்கள் அறிய வேண்டும். அவை:

  1. முதலில் உங்களுக்கு இந்தத் தனிநபர் கடன் மிகவும் அவசியமா? என்று ஒரு முறைக்கு இருமுறை அல்ல பல முறை நீங்கள் நன்கு யோசித்து எடுக்க வேண்டும். 
  2. நீங்கள் பெறும் வருமானத்திற்கு ஏற்ப தனிநபர் கடன் வழங்கும் அனைத்து விதமான வங்கிகள் பற்றிய அனைத்து தகவல்களும் உங்களிடம் இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு சில வங்கிகள் செயலாக்க கட்டணம் விதிப்பதில்லை.  
  3. அதேபோல பெற்ற கடனை முறையாக திருப்பி செலுத்த தேவையான வருமானத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். 
  4. தனிநபர் கடன் பெறுவதற்கு முன் வேறு வழிகளில் கடன் பெற முடியுமா? என்று ஆராய வேண்டும். அதாவது, உங்களிடம் இருக்கும் நகைகள், சொத்துக்கள் வைத்து பெற முடியுமா? என்பதை அறிவது மிகவும் நல்லது. 
  5. தனிநபர் கடன்கள் அதிக வட்டி வீதங்களைக் கொண்டு இருப்பதால் குறைந்த வட்டியில் கடன் பெற ஏதேனும் வாய்ப்புகள் உள்ளதா என்று ஆராய வேண்டும். இது உங்கள் நிதி சுமையைக் குறைக்க உதவும். 
  6. அதேபோல நீங்கள் வாங்கிய கடனை முறையாக குறித்த நேரத்தில் செலுத்தி முடித்தால் உங்களது கிரடிட் ஸ்கோர் அதிகரிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் வழியாக நீங்கள் மீண்டும் கடன் பெறும்போது உங்களுக்கு வட்டி குறைப்பு மற்றும் அதிக திருப்பி செலுத்தும் காலம் போன்ற சலுகைகளை வழங்குகிறது. 
  7. அதேபோல நீங்கள் வாங்கிய கடனை முறையாக குறித்த நேரத்தில் செலுத்தாவிடில் உங்களது கிரடிட் ஸ்கோர் குறைவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் வழியாக நீங்கள் மீண்டும் கடன் பெற விண்ணப்பிக்கும் போது உங்களுக்கு வட்டி அதிகரிப்பு மற்றும் குறைவான திருப்பி செலுத்தும் காலம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேலும், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.  

Related Posts

எங்கள் இருப்பிடத்தை காண

ffreedom.com,
Brigade Software Park,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070

08069415400

contact@ffreedom.com

பதிவு

புதிய இடுகைகளுக்கு எனது செய்திமடலுக்கு குழுசேரவும். புதுப்பித்த நிலையில் இருப்போம்!

© 2023 ffreedom.com (Suvision Holdings Private Limited), All Rights Reserved

Ffreedom App

ffreedom app பதிவிறக்கம் செய்து, LIFE என்ற கூப்பன் கோடை உள்ளிடவும், உடனடியாக ரூ.3000 உதவித்தொகையைப் பெறுங்கள்.